search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை துறை"

    • ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
    • மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. பின்னலாடை ரகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய பின் ஏற்றுமதியாளர்கள் உரிய ஆவணங்களுடன் மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரீபண்ட் தொகை விடுவிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு (2022 - 23) நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகம் மூலம் 360 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

    16 சரகங்களை உள்ளடக்கிய திருப்பூரின் இரண்டு வணிக வரி மண்டலங்கள் மூலம் 520 கோடி ரூபாய் என மத்திய, மாநில வரித்துறைகள் மூலம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை மொத்தம் 880 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு பரிசீலித்து உடனடியாக ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகை விடுவிக்கிறோம். இக்கட்டான சூழல்களில் உரிய காலத்தில் ரீபண்ட் கிடைப்பது, பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதன தேவைக்கு பக்கபலமாக உள்ளது என்றனர்.

    • 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன், 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பனியன் தொழிலாளருக்கு விடுதி, கல்வி வசதியை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வலியுறுத்துவது, மின் கட்டண உயர்வை கைவிட அரசை வலியுறுத்துவது, பல்வேறு கோரிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பார்வைக்கு வைப்பது, சணல், தேங்காய் வாரியம் இருப்பது போல் பின்னலாடைக்கென வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் நிர்வாகி சிவக்குமார் மின் இயக்க சாதனங்கள் அவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்தும், ஆடிட்டர் அரசப்பன் மத்திய, மாநில அரசுகளின் மானியம், சலுகை குறித்தும் பேசினர்.

    • மெட்ரோ ரெயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.
    • இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பின்னலாடை தொழில் அமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி அளித்த மனுவில்,கோவை உக்கடத்திலிருந்து, அவிநாசி மார்க்கமாக, விமானநிலையம், கணியூர் வரையிலும், பல்லடம் மார்க்கத்தில் உக்கடத்திலிருந்து காரணம்பேட்டை வரை மெட்ரோ ெரயில் சேவை தொடங்க தமிழக அரசால் உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ெரயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில், கணியூரில் இருந்தும், காரணம் பேட்டை, சாமளாபுரம் வழியாக திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.

    உலகளவில் புகழ் பெற்ற பின்னலாடை நகரம் திருப்பூர். கோவையில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து கோவைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்கின்றனர். கோவை - திருப்பூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் இயக்கினால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெறும்.

    சாமளாபுரத்தில் இருந்து நொய்யலாற்றின் மேல் மெட்ரோ ெரயில் திட்டம் அமைந்தால் நில ஆர்ஜிதம் செய்வது சுலபமாகும். இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்து தவிர்க்கப்படும். பயண நேரம் குறையும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதனுடன் கோவை - திருப்பூர் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது குறித்த மாதிரி வரைபடத்தையும் அவர் இணைத்துள்ளார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அளித்த மனுவில்,பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்ள குறு, சிறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரித்துள்ளது. உற்பத்தி பிரிவில், 50 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது.வடமாநில தொழிலாளரை சார்ந்தே நிறுவனங்களை இயக்கவேண்டியுள்ளது. திருப்பூர் முழுவதும் மூன்று லட்சம் வடமாநில தொழிலாளர் உள்ளனர். ஒரு தொழிலாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 300 கோடி ரூபாய் திருப்பூரிலிருந்து வெளிமாநிலத்துக்கு செல்கிறது.

    டீமா சங்கம் சார்பில் அரசு உதவியுடன் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுகிறது. இதில், உள்ளூரை சேர்ந்த 10 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். தமிழகத்தில் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்காக்களை அமைத்தால் வேலைவாய்ப்பு பெருகும், மாநில பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.தொழிலாளர் நலன், தொழில் நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு மேல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பருத்தி கொள்முதல் மையம், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைப்பது அவசியம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது. ஆயிரத்து 200 தென்னை விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

    தென்னையிலிருந்து கிடைக்கும் நீரா பானத்தை, அதன் தன்மை மாறாமல் பேக்கிங் செய்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் அடங்கிய நீரா பானத்தை, தென்னீரா என்ற பெயரில் விற்று வருகிறோம்.கேரள மாநிலம் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகரித்த தென்னீராபானத்தை, அரசு பானமாக அறிவித்து முதல்வர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையில் வரவேற்பு பானமாக பயன்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். நீரா பானம் இறக்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

    திருப்பூர் 

    இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை 29ல் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்று, முக்கிய அம்சங்கள் குறித்து பேசினர்.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:- இந்திய ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வேகமெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முக்கியமான, 15 அம்சம் குறித்து இரு நாட்டு தொழில் நுட்பக்குழுவினர் 85 அமர்வுகளில் பேசிஉள்ளனர்.வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய ஆயத்த ஆடைகள், பிரிட்டன் சந்தையில் வரியின்றி இறக்குமதியாகும்.இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்கள், போட்டி நாடுகளை எளிதாக எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க செய்ய முடியும். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, பிரிட்டனிலிருந்து ஆர்டர் வருகை கண்டிப்பாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு சமீபத்தில் பொதுபயன்பாட்டு மையம் அமைக்கும் திட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
    • மொத்த திட்ட மதிப்பீடு உச்சவரம்பு 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே தொழில் சார்ந்த 20 மற்றும் அதற்கு மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர் இணைந்து அரசு மானியத்துடன், நவீன தொழில்நுட்பங்களுடன் தங்கள் தொழில் சார்ந்த பொது பயன்பாட்டு மையம் அமைக்க இந்த திட்டம் கைகொடுத்து வருகிறது.

    திருப்பூர் தொழில்பாதுகாப்புக்குழு, நிட்டிங், பிரின்டிங், டிசைனிங் பொது பயன்பாட்டு மையங்கள், பல்லடத்தில் விசைத்தறிக்கான பொது பயன்பாட்டு மையங்களை இந்த திட்டத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் பொதுபயன்பாட்டு மையம் அமைக்கும் திட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் வரை பொது பயன்பாட்டு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.

    மொத்த திட்ட மதிப்பீடு உச்சவரம்பு 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்கான உச்சவரம்பு தொகை 30 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மதிப்பீட்டில் மையங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 10 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் மையம் அமைத்தால் மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் என மொத்தம் 90 சதவீதம் மானியம் என்கிற அம்சமும் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திட்டத்தில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அரசு அனுமதி கிடைக்கும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் குறு, சிறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, குறைந்த முதலீட்டில் திறன் மிக்க பொது பயன்பாட்டு சேவை மையங்களை மிக எளிதாக அமைத்துக்கொள்ளமுடியும்.திருப்பூரில் பின்னலாடை துறையினரை இணைத்து சேம்பிளிங், மறுசுழற்சி ஆடை, தொழில்நுட்ப ஜவுளி, பினிஷிங், ஆப்செட் பிரின்டிங் என இந்த திட்டம் மூலம் பல்வேறு புதிய பொதுபயன்பாட்டு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆடை உற்பத்தி மட்டுமின்றி வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையங்களும் அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பின்னலாடை உற்பத்தியாளர்களை ஈர்க்கும்வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
    • இயற்கை சாயமேற்றிய ஆடை தயாரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உலகளாவிய நாட்டினர் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் இயற்கை சார்ந்து தயாரிக்கப்படும் ஆயத்த ஆடை ரகங்களுக்கு சர்வதேச சந்தையில் நாளுக்குநாள் மதிப்பு அதிகரித்துவருகிறது.திருப்பூர் முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் செயல்படும் அடல் இன்குபேஷன் மையம் ஆயத்த ஆடைகளுக்கு இயற்கை சாயமேற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது. வாழை நார், பட்டு இழையில் பின்னலாடை ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காய், கனி, இலை, மர பட்டைகளை பயன்படுத்தி இயற்கை சாய பொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    துணிகளுக்கு வெற்றிகரமாக இயற்கை சாயமேற்றும் தொழில்நுட்பங்களையும் கண்டறிந்து, இந்த மையம் செயல்வடிவம் கொடுத்துவருகிறது. இயற்கை சாயமேற்றிய ஆடை தயாரிப்பை நோக்கி பின்னலாடை உற்பத்தியாளர்களை ஈர்க்கும்வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

    இது குறித்து இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:-

    சர்வதேச அளவில் 72 சதவீத ஆயத்த ஆடைகள், பயன்பாட்டுக்குப்பின் நிலத்தில் புதைக்கப்படுகிறது. ரசாயன நிறமிகள் உள்ள ஆடைகளால் இயற்கை வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான ஆயத்த ஆடைகள் நிலத்தில் புதைக்க உகந்தவையாக இல்லை.சர்வதேச ஆடை வர்த்தகர்கள், இயற்கை இழையில் இயற்கை சாயமேற்றி தயாரிக்கப்படும் ஆடை ரகங்களை வாங்கவும், விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். எனவே இயற்கை சார் ஆடை தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.அடல் இன்குபேஷன் மையத்தில், இயற்கை இழை ஆடை ரகங்கள்,இயற்கை சாய பொடி தயாரிக்கப்பட்டுள்ளது. துணிக்கு இயற்கை சாயமேற்றி சோதனை செய்யப்பட்டுள்ளது. புதுப்புது வண்ணங்களில் இயற்கை சாயம் தயாரிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்து, பின்னலாடை துறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.இதனால்புதுமையை விரும்பும் தொழில்முனைவோர் இயற்கை சார் ஆடை உற்பத்தியை நோக்கி ஈர்க்கப்படுவர். அவர்களுக்கு, இயற்கை சாயமேற்றிய ஆடை தயாரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பிரத்யேக பாடத்திட்டம் உருவாக்கி இயற்கை சார் ஆடை தயாரிப்பு பயிற்சிகள் அளிப்பது குறித்தும் திட்டமிட்டுவருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×